பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை
 புத்தரின் பொன் மொழிகள்


மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது.


* * * * * * * *

எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. மனமே முதன்மையானது. மனமே அவைகளை வழி நடத்துகிறது. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடரும்.


* * * * * * * *

ஒருவன் எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ வெறுக்கவோ கூடாது. கோபத்தினாலோ போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்.


* * * * * * * *

எப்படி இந்த மாபெருங் கடல் ஒரே சுவையான உப்புச் சுவையை உடையதாக இருக்கிறதோ, அதே போல் இந்தத் தம்மமும் ஒரே சுவையை, விடுதலை என்னும் சுவையை உடையதாக இருக்கிறது.


* * * * * * * *

பிறருடைய குற்றத்தை எளிதில் காண முடிகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களை உமியைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர், மிருகங்களின் தோலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும் வேட்டைக்காரனைப் போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைத்துக் கொள்கிறார். எப்போதும் பிறருடைய குற்றத்தையே தேடிக் கொண்டிருப்பவர்கள் எளிதில் கோபத்தின் வசம் ஆட்படுகிறார்கள். தங்களுடைய குற்றங்களை அழிக்க முடியாத அளவுக்கு வளர விட்டு விடுகிறார்கள்.


* * * * * * * *

பூக்களைக் கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, பூக்களைப் போலவே தோன்றி மறையும் மனிதனாகப் பிறந்தவனும் பல நன்மைகளைச் செய்ய முடியும்.


* * * * * * * *

நீங்கள் மற்றவர்களிடம் பேசும்பொழுது, சரியான நேரத்திலோ அல்லது தவறான நேரத்திலோ, காரணத்துடனோ அல்லது காரணமின்றியோ, அமைதியாகவோ அல்லது கடுமையாகவோ, ஒரு குறிக்கோள் பற்றியோ அல்லது குறிக்கோள் இன்றியோ, மனம் நிறைந்த அன்புடனோ அல்லது மனம் நிறைந்த வெறுப்புடனோ பேசலாம். அப்பொழுது கீழ்க்கண்டவாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்:

'நம் மனம் தவறான வழியில் செல்லாது, தீயவைகளைப் பேசாது, இரக்கத்துடனும் கருணையுடனும் மனம் நிறைந்த அன்புடனும் வெறுப்பின்றியும் வாழலாம். நாம் நிறைந்த அன்புடன் ஒருவரிடம் தொடங்கி, விசாலமான, நிறைந்த, அளவிட முடியாத, பகைமை இல்லாத கேடற்ற இந்த அன்பை இவ்வுலகெலாம் பரப்பி அனைவரிடமும் அன்பு காட்டி வாழலாம்.' இவ்வாறு உன்னை நீ பயிற்று வித்துக் கொள்ள வேண்டும்.


* * * * * * * *

சில சமயம் கட்டாயம் நடக்கும் என்று நினைப்பது நடப்பதில்லை. நிச்சயமாக நடக்காது என்று நினைப்பது நடந்துவிடும். ஆண், பெண்களின் மகிழ்ச்சி அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சார்ந்திருப்பதில்லை.


* * * * * * * *

மெய்யறிவுடையவனை மூன்று விதத்தில் தெரிந்து கொள்ளலாம். எந்த மூன்று? அவன் தன் குற்றங்களை உள்ளபடியே தெரிந்து கொள்கிறான். தெரிந்தகொண்ட பின் அதனைத் திருத்திக் கொள்ள முற்படுகிறான். மற்றவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களை மன்னித்து விடுகிறான்.

I
* * * * * * * *

தீமையைத் தவிர், நன்மை செய்யப் பழகு, மனத்தைத் தூய்மையாக்கு. இவையே புத்தர்களின் போதனையாம்.
* * * * * * * *

நீரில் இருந்து அறிந்து கொள்வீர்:
மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.

வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறவிலி அரை நிறை குடம்
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.
* * * * * * * *

கேவலமான குற்றவாளி இரட்டைப் பிடியுள்ள இரம்பத்தால் உங்கள் கை கால்களைத் துண்டிக்கும் போது
உங்கள் உள்ளத்தைப் பகைமையால் நிரப்பிக் கொண்டால்
உங்களை என் போதனைகளைப் பின் பற்றுபவராகக் கூறமுடியாது.


* * * * * * * *

அன்பின் காரணமாக உருவாகும் மனச் சுதந்திரத்தினைப் பேணி வளர்த்து, எப்போதும் பயின்று, தனது வாகனமாகவும் அத்திவாரமாகவும் அமைத்து, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி ஒன்று சேர்த்தால் ஒருவர் இந்தப் பதினொரு விதங்களில் ஆசீர்வதிக்கப்படுவார். எப்போதுமே மகிழ்வோடு தூங்குவார், மகிழ்வோடு விழிப்பார், தீய கனவுகள் காணார், மனிதர்களின் அன்புக்குரியவராவார், மற்ற உயிர்களின் அன்புக்குரியவராவார், கடவுளர் ஆதரிப்பர், தீயிலிருந்தும், விஷங்களிலிருந்தும், ஆயுதங்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவார், மன ஒருமைப்பாடு எளிதாக அடைவார், பொலிவுடன் காணப்படுவார், அமைதியாக மரணம் அடைவார், மரணத்தின் பின் சொர்க்கத்தில் மறுபிறப்பெடுப்பார்.
* * * * * * * *

நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் விரைவில் சமாதானத்தை நாடி நீண்ட நாள் நிலைக்கக் கூடிய ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கும் உதவாத உடைந்த விரிசலுடைய பானைகளைப் போல முட்டாள்கள் சமாதானத்தை நாடுவதில்லை. இதைப் புரிந்த கொண்ட ஒருவன், இந்தப் போதனையைச் சிந்தித்துப் பார்ப்பவன் எது கடினமானதோ அதைச் செய்ய முற்படுகிறான். அவன் போற்றத்தக்கவன். யார் ஒருவன் மற்றவரின் தூற்றுதல்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சமரசம் செய்வதற்குத் தகுதியானவன்.


* * * * * * * *

சுவையுள்ளதோ சுவையற்றதோ அதிகமோ கொஞ்சமோ அன்போடு செய்த எதையும் உண்ண முடியும். உண்மையில் அன்பே உயர்ந்த சுவை.
* * * * * * * *

பொறாமைகொண்ட, சுயநலமுள்ள அல்லது நேர்மையற்ற ஒருவன், சிறந்த பேச்சாளியாகவும், கட்டுடலோடும் இருந்தாலும் கவர்ச்சியற்றவனாகவே தோன்றுவான். ஆனால் இந்தத் தீய எண்ணங்களை அகற்றியவன், வெறுப்பில்லாதவன், அவனே (அல்லது அவளே) உண்மையிலேயே அழகானவன்(ள்).


* * * * * * * *

அடக்கமில்லாத, ஒழுக்கமில்லாத அல்லது நிறைவடையாத ஒருவன் மற்றொருவனை அடக்கத்தோடு, ஒழுக்கத்தோடு, நிறைவோடு வாழ வைக்க முடியாது. ஆனால் அடக்கமுள்ள, ஒழுக்கமுள்ள, நிறைவுள்ள ஒருவன் மற்றவரையும் தன்னைப் போலவே உருவாக்க முடியும்.


* * * * * * * *

மனநிறைவே மாபெரும் செல்வமாம்.


யாராவது என்னையோ தம்மத்தையோ அல்லது சங்கத்தையோ திறனாய்வு செய்தாலோ அல்லது குறை கூறினாலோ நீ கோபப்படவோ ஆத்திரப்படவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்றவனாக்கி அவர்கள் கூறியது நன்மையா தீமையா என்று விளங்காமற் செய்து விடும். அவர்களுக்கு எளிமையாக அவர்கள் கூற்றில் உள்ள தவற்றைப் புரியவை. 'அது தவறு, அது சரியானதன்று, அது எங்கள் வழி அன்று. நாங்கள் அவற்றைச் செய்வதில்லை' என்று கூறு.

அதேபோல் யாராவது என்னையோ தம்மத்தையோ அல்லது சங்கத்தையோ புகழ்ந்து பேசினால் அதற்காக நீ பெருமைப் படவோ கர்வம் கொள்ளவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்ற வனாக்கி அவர்கள் கூறியது நன்மையா தீமையா என்று விளங்காமற்செய்து விடும். அப்படி புகழ்பவர்களுக்கு அவர்கள் கூற்றில் உண்மை இருப்பதைக் கூறு. 'இது சரியானது, அது மிகச் சரியானது, இதுதான் எங்கள் வழி, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்' என்று கூறு.

* * * * * * * *

சொற்களுக்கு ஐந்து குறிகளிருந்தால் அவை தீயசொற்கள் அல்ல, நல்ல சொற்கள். அறிஞர்களால் புகழப்பட்டு போற்றப் படுபவை. எந்த ஐந்து? அவை சரியான நேரத்தில் சொல்லப்பட்டவை, வாய்மை உடைத்தவை, அமைதியாகப் பேசப்பட்டவை, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்பவை, அன்போடு பேசப்படுபவை.

* * * * * * * *
ஆழமான ஏரி தெளிவாகவும், அசைவற்றும் இருப்பதைப்போல, அறிவுடையோர் போதனைகளைக் கேட்கும் போது முற்றாக அமைதியடைகிறார்கள்.


அதிகார பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிப்பது, எது அதிருப்தி தருவது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கு எது சரியானது மேன்மையானது, அறிஞர்களால் பாராட்டப்பட்டது, அதை ஏற்றுப் பயிற்சி செய்தால் பயன்தந்து மகிழ்ச்சியளிப்பது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள். "


* * * * * * * *

சில துறவிகள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த புத்தர் அவர்களிடம் சொன்னார்: 'மிருகங்கள் ஒன்றுக்கொன்று மரியாதையுடனும், விட்டுக்கொடுத்தும், நற்பண்புடனும் இருக்கும் போது நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும்.'


* * * * * * * *

செல்வம் போன்றவற்றை இழந்துவிட்டால் அது ஒன்றும் பெரிய இழப்பல்ல. ஆனால் அறிவை இழந்து விட்டால் அது பேரிழப்பாகும். செல்வம் போன்ற வற்றை அடைந்துவிட்டால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவமுடையதல்ல. அறிவைப் பெறுவதே மிக முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும்.


* * * * * * * *

பொறுப்பற்ற ஒருவன் புனித நூட்களைப் படித்தும், அதன் படி நடக்கவில்லையென்றால், அது மாடு மேய்ப்பவன் மற்றவனின் மாடுகளைக் கணக்கிடுவதைப்போல, ஆன்மீக வாழ்க்கையின் எந்தப் பயனையும் அடைய முடியாது.
* * * * * * * *

தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்
தாயன்பைப் போல எல்லையிலா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.


மற்றவர்க்கு அறிவுரை கூற விரும்பும் ஒருவர் முதலில் தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்; 'உடலாலும், சொல்லாலும் முழுத் தூய்மையை மட்டுமே நான் கடைப்பிடிக்கிறேனா இல்லையா? இந்தப் பண்புகளை நான் கொண்டிருக்கிறேனா இல்லையா?' அப்படியில்லையென்றால், சந்தேகமின்றி மக்கள் 'சொல்லாலும், உடலாலும் சரியான நன்னடத்தையை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள்' என்று கூறுவார்கள். இதைச் சொல்வதற்கு மக்களிருக்கின்றனர்.

மறுபடியும் மற்றவர்க்கு அறிவுரை கூறவிரும்பும் ஒருவர் முதலில் தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். 'தீமையைத் தவிர்த்து மற்றவரிடத்தில் அன்பை வளர்த்துக் கொண்டுள்ளேனா இல்லையா? இக்குணம் என்னுள் நிலைநாட்டப்பட்டதா இல்லையா?' அப்படி நிலை நாட்டப்படவில்லை யென்றால், மக்கள் சிலர் 'உன்னிடம் முதலில் அன்பை வளர்த்துக்கொள்!' என்பார்கள்.


* * * * * * * *

பெரிய குடை மழைக்காலத்தில் நம்மை மழைத் துளியிலிருந்து பாதுகாப்பதைப் போலத் தர்மத்தைப் பயிற்சி செய்பவர்களைத் தர்மம் பாதுகாக்கும்.
* * * * * * * *

காலையிலும், மதியத்திலும், இரவிலும் தர்மத்தைப் பின் தொடர்பவர்கள் காலையிலும், மதியத்திலும், இரவிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


யாராவது ஒருவன் உங்களைத் திட்டினாலோ தாக்கினாலோ உங்கள் மீது கல்லெறிந்தாலோ கட்டையாலோ வாளாலோ தாக்கினாலோ உங்கள் உலக ஆசா பாசங்களையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டுக் கீழ்க்காணுமாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். என் மனம் அலைபாயாயது, தீய வார்த்தைகளைப் பேசமாட்டேன். வெறுப்பைப் புறம் தள்ளி மற்றவரின் நலனுக்காக அன்புடனும் கருணையுடனும் வாழ்வேன் என்று பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.


* * * * * * * *

பாசனக்காரர்கள் நீரைச் செலுத்திப் பாய்ச்சுகிறார்கள். அம்பு விற்போர், அம்புகளைக் கோணலின்றிச் செவ்விதாகச் செய்கிறார்கள். தச்சர் மரங்களை உருவமைக்கிறார்கள். அறிஞர் தம்மைத் தாமே அடக்கி ஆள்கிறார்.
* * * * * * * *

உடன் வாழும் ஆன்மீக நண்பர்களுடன் எப்படி இணக்கத்துடன் வாழ்கிறார் என்று புத்தர் அநுருத்தரைக் கேட்டார். அவர் சொன்னார்: 'இவ்வகையான ஆன்மீக நண்பர்களுடன் வாழ்வது ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். பொதுவிடத்திலும் தனிமையிலும் அவர்களுடன் மனதாலும், பேச்சாலும் நடத்தையாலும் அன்போடு நடந்து கொள்கிறேன். என் விருப்பங்களை ஒதுக்கி வைத்து அவர்கள் விருப்பங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறேன். இதனால் நாங்கள் பல உடல்களைக் கொண்டிருந்தாலும் ஓர் உள்ளத்தைக் கொண்டுள்ளோம்.'


* * * * * * * *

முரண்பாட்டில் ஆபத்தைக் கண்டு, இணக்கத்தில் அமைதியைக் கண்டு, ஒற்றுமையோடும் அன்புள்ளத்தோடும் வாழவேண்டும். இதுவே புத்தர்களின் போதனையாம்.
* * * * * * * *

நால்வகையான மக்கள் உலகில் உளர். எந்த நான்கு? தன்னுடைய நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை இல்லாதவர்; மற்றவர் நலத்தில் அக்கறை கொண்டு தன் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்தில் அக்கறை கொண்டு மற்றவர் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்றை உள்ளவர். இந்த நான்கு வகை மக்களுள் தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை உள்ளவரே முதல்வர், மேலோங்கியவர், உச்சத்தில் இருப்பவர், தலை சிறந்தவர்.


* * * * * * * *

புத்த தம்ம சங்கத்தில் நீ சரணடைந்தால் உன்னிடம் அச்சமோ நடுக்கமோ என்றுமே எழாது.
* * * * * * * *

திறமையான இல்லறத்தவராக இருப்பது நன்று. உணவைப் பகிர்ந்து கொள்வது நன்று. சேர்த்த செல்வத்தைப் பற்றித் தன்னடக்கத்துடன் இருப்பது நன்று. அந்தச் செல்வம் குறைந்தாலும் மனம் தளராமல் இருப்பது நன்று.


வெறுப்பை அன்பினால் வெல்க. தீமையை நன்மையால் வெல்க. கருமித்தனத்தைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினால் வெல்க.


* * * * * * * *

அன்பையும் மரியாதையையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் ஒத்துப்போகும் தன்மையும், இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஆறு விதத்தில் பேணலாம். ஆன்மீக வாழ்வில் உடனிருப்போருடன் பொது இடத்திலும் தனிமையிலும் அன்போடு நடந்து கொள்வது; அன்போடு பேசுவது; அன்போடு நினைப்பது; எந்தத் தயக்கமும் இல்லாமல், நாம் நியாயமாகப் பெற்ற எதையும், அது நாம் இரந்து பெற்ற உணவாக இருந்தாலும் அவர்களோடு பகிர்ந்து கொள்வது; அவர்களுக்கும் நமக்கும் உள்ள முழுமையான, அடக்கப்படாத, சுதந்திரம் தரும், சான்றோர்களால் போற்றப்படும், மன ஒருமைப்பாட்டிற்கு ஏதுவான பண்புகள்; ஆன்மீக வாழ்வில் உடனிருப்போருடன் பொது இடத்திலும் தனிமையிலும் கொண்டிருக்கும் மேன்மையானவை பற்றிய, சுதந்திரத்திற்கு எடுத்துச் செல்பவை பற்றிய, துக்கத்தை அறவே ஒழிப்பவை பற்றிய அறிவு; இவை ஆறும் இருக்கும் போது அன்பும் மரியாதையும், உதவி செய்யும் மனப்பான்மையும் ஒத்துப்போகும் தன்மையும், இணக்கமும், ஒற்றுமையுமிருக்கும்.


* * * * * * * *

தம்மத்தை விரும்புவோர், பேச்சிலும், எண்ணத்திலும், செய்கையிலும் தூய்மையாக இருப்பவர், எப்போதும் அமைதியோடும், நற்குணத்தோடும், கவனத்தோடும், ஒழுக்கத்தோடும் இருப்பவர், உலகில் நிறைவாக வாழ்கின்றனர்.
* * * * * * * *

ஒருவனின் சிறந்த நண்பன் யார்? எவருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நன்மை நிறைந்தவைகளாகத் தூய்மையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் சிறந்த நண்பர்கள். 'நாங்கள் எங்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை!' என்று அவர்கள் கூறினால்கூட அவையே (அக்குணங்களே) அவர்களுடைய உண்மையான நண்பர்கள். ஏன்? ஏனென்றால் ஒருவன் தனது நண்பன் தனக்குச் செய்வதைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.


* * * * * * * *

நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.


* * * * * * * *

ஒரு முறை ஒரு துறவி சீதபேதியால் பாதிக்கப்பட்டு அவருடைய கழிவுகள் கிடந்த இடத்திலேயே விழுந்து கிடந்தார். அப்போழுது துறவிகளின் விடுதிகளுக்கு வருகை தந்த அண்ணலும் ஆனந்தரும் அந்தத் துறவி கிடந்த இடத்திற்கு வந்தனர். அண்ணல் துறவியைப் பார்த்து,

'துறவியே, உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று வினவினார்.

'நான் சீதபேதியால் துன்புறுகிறேன்!'

'உங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?'

'இல்லை அண்ணலே!'

'மற்ற துறவிகள் ஏன் உங்களைக் கவனிக்கவில்லை?'

'ஏனென்றால் என்னால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை அண்ணலே!'

பின்னர் அண்ணல் ஆனந்தரை அழைத்து,

'நீர் கொண்டு வாருங்கள். நாம் இந்தத் துறவியைக் குளிப்பாட்டுவோம்' என்றார். ஆனந்தர் நீர் கொண்டு வந்தார். அண்ணல் நீரைத் துறவியின் மீது ஊற்ற ஆனந்தர் தேய்த்துக் குளிப்பாட்டினார். அண்ணலும் ஆனந்தரும் அத்துறவியைத் தூக்கிக் கொண்டுபோய் ஒரு படுக்கையில் கிடத்தினர். பிறகு அண்ணல் மற்றத் துறவிகளையெல்லாம் அழைத்து, 'துறவிகளே நீங்கள் ஏன் அந்த நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைக் கவனிக்கவில்லை?' என்று கேட்டார்.

'ஏனென்றால் எங்களுக்கு அவரால் எந்தப் பயனும் இல்லை அண்ணலே!' என்றனர்.

'உங்களைக் கவனிப்பதற்கு உங்களுக்கு அன்னையோ தந்தையோ இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் பின் யார் தான் கவனிப்பார்? எனக்குப் பணிவிடை செய்ய விரும்புவோர் நோயாளிகளுக்கும் பணிவிடைசெய்ய வேண்டும்.'



* * * * * * * *

தன் உடலுறுப்பைக் காப்பாற்றச் செல்வத்தை விட்டுக் கொடுப்பவன் அல்லது உயிரைக் காப்பாற்ற உடலுறுப்பைத் தியாகம் செய்பவன் தர்மத்திற்காகத் (வாய்மைக்காக) தன் செல்வத்தையும், உடலுறுப்பையும், உயிரையும், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* * * * * * *

நம்மை விடப் பலசாலி ஒருவன் நம்மிடம் மரியாதை இன்றிப் பேசும் போது அவனுக்குப் பயந்து அதனைப் பொறுத்துக் கொள்கிறோம். நமக்குச் சமமானவரின் மரியாதையற்ற பேச்சை வாக்கு வாதத்தைத் தவிர்ப்பதற்காகப் பொறுத்துக் கொள்கிறோம்.ஆனால் நமக்குக் கீழ்ப்பட்ட ஒருவரின் கடுமையான பேச்சைப் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறுமையாகும். இது சான்றோர்கள் வாக்கு. ஆனால் வெளி தோற்றத்திலிருந்து யார் நம்மை விடப் பலசாலி, சமமானவர் அல்லது கீழானவர் என்று எப்படித் தெரிந்து கொள்வது? உண்மையில் சில சமயம் கவர்ச்சியற்றது நன்மைக்குப் பின்னால் மறைந்திருக்கும். எனவே எவருடன் பேசும் போதும் பொறுமையாகப் பேசுங்கள்.


* * * * * * * *

தானங்களில் சிறந்தது தம்ம தானம்.


* * * * * * * *

நமது வெற்றிகளைக் கண்டு நாம் திருப்தியும் மகிழ்வும் கொள்வது போலவே மற்றவரின் வெற்றிகளைக் கண்டும் நாம் திருப்தியும் மகிழ்வும் கொள்ளவேண்டும்.


* * * * * * * *

மூடிய கையுடன் போதிக்கும் ஆசிரியர் ஏதோ இரகசிய போதனைகளை மறைத்து வைத்திருப்பது போலன்றி மறைத்த அல்லது திறந்த என்ற கருத்தே இல்லாமல் நான் தர்மத்தைப் போதித்திருக்கின்றேன்.


நான் சென்ற பிறகு தர்மமே உங்கள் ஆசிரியராகட்டும்.


அவ்வப்போது உங்கள் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது. அவ்வப்போது உங்கள் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது.


* * * * * * * *

அறிஞர் நன்றியுள்ளவராக இருக்கிறார். அவர் பக்தியுள்ள மன மகிழ்ச்சியூட்டுகிற நண்பர். துன்பத்தில் உள்ளவர்களை மரியாதையுடன் கவனிக்கின்றார். எனவே அவரை 'நல்லவர்' என்று சரியாகக் கூறுகிறோம்.
* * * * * * * *

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான்; மறுமையிலும் மகிழ்ச்சி யடைகிறான்; அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் தன்னுடைய நல்ல செய்கைகளைக் கண்டு மகிழ்ந்து மேன்மேலும் இன்பமடைகிறான்.


* * * * * * * *

தவறு செய்வதை விட்டு விடுங்கள். அப்படி விட்டு விட முடியும். முடியாதென்றால் நான் உங்களை விட்டு விடக் கூற மாட்டேன். முடியும் என்பதால் தான் நான் கூறுகிறேன், 'தவறு செய்வதை விட்டு விடுங்கள்' தவறு செய்வதை விட்டு விட்டால் அது உங்களை நட்டத்திற்கும் சோகத்திற்கும் எடுத்துச் செல்லுமானால் உங்களிடம் அவ்வாறு கூறமாட்டேன். அது உங்களுக்கு நலனும் மகிழ்ச்சியும் உண்டாக்கும். எனவே கூறுகிறேன், 'தவறு செய்வதை விட்டு விடுங்கள்.'

நல்லதைப் பேணுங்கள். அப்படிச் செய்ய முடியும். முடியாதென்றால் நான் உங்களை அப்படிச் செய்யுமாறு கூற மாட்டேன். முடியும் என்பதால் தான் நான் கூறுகிறேன், 'நல்லதைப் பேணுங்கள்.' நல்லதைப் பேணுவதால் அது உங்களை நட்டத்திற்கும் சோகத்திற்கும் எடுத்துச் செல்லுமானால் உங்களிடம் அவ்வாறு கூறமாட்டேன். ஆனால் அது உங்கள் நலனையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். எனவே கூறுகிறேன், 'நல்லதைப் பேணுங்கள்.'


* * * * * * * *

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை பிரியமானது. மற்ற உயிர்களையும் உன் உயிரோடு ஒப்பிட்டு நோக்கி ஒன்றையும் கொல்லாதே; கொல்வதற்கும் உடன்படாதே.

All tremble at punishment, life is dear to all. Therefore, put yourself in the place of others and neither kill nor condone killing. Dhp.130

* * * * * * * *

ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்தோ, படுத்தோ இருப்பவர், அந்த மரத்தின் ஒரு கிளையைக் கூட ஒடிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர் ஒரு நண்பனுக்குத் துரோகம் செய்பவராவார். ஒரு தீயவராகிறார்.
* * * * * * * *

இமயமலையைப் போன்று, நல்லவர்கள் தொலைவிலிருந்தே பிரகாசமாகத் தோன்றுகின்றனர். இரவில் எய்யப்பட்ட அம்பைப் போலத் தீயவர்கள் எவருக்கும் தென்படுவதில்லை.
* * * * * * * *

"இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று அண்ணல் கேட்டார்.
"கண்ணாடியின் பயன் என்ன?"
"பிரதிபலிப்பதற்காக, ஐயா" பதிலளித்தார் இராகுலர்.
"அதுபோல உடலால், சொல்லால், மனத்தால் செய்ய வேண்டிய ஒரு செயலைக் கவனமாகச் சிந்தித்த பின்பே செய்ய வேண்டும்."

வில்லைப் போலவும் மூங்கிலைப் போலவும் வளைந்து கொடுத்தால் எவருடனும் வேற்றுமை உருவாகாது.
* * * * * * * *

கங்கையாறு ஓடுகிறது, தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது. கிழக்கு நோக்கி ஓடுகிறது. அதைப்போலவே அட்டாங்கமார்க்கமென்னும் அந்த உயர்ந்த எட்டு வழிகளை எவரெவர் பயன்படுத்திப் பின்பற்றி வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் நிருவாண நிலை என்னும் திசை நோக்கியே செல்கின்றனர்.
* * * * * * * *

உண்மையில், நல்லவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர்.
* * * * * * * *

'அவன் என்னை இகழ்ந்து பேசினான், என்னைத் தாக்கினான், என்னைத் துன்புறுத்தினான், என் உடைமையைக் கவர்ந்து கொண்டான்' என்பது போன்ற எண்ணங்களை ஒருவன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய வெறுப்பு ஒருபோதும் நீங்காது. அப்படிப்பட்ட எண்ணங்களை விட்டு விடுபவனின் வெறுப்பு நீங்கிவிடுகிறது.

ஏனெனில், வெறுப்பை வெறுப்பினால் நீக்க முடியாது. வெறுப்பை அன்பினாலேயே நீக்க முடியும். இதுதான் தொன்றுதொட்டு நிலைத்த தர்மமாகும்.
* * * * * * * *

பண்புள்ளவர்களுக்கு எல்லா நாளும் சிறந்த நாள் தான். அவர்களுக்கு எல்லா நாளும் புனித நாளேயாகும்.


* * * * * * * *

ஆடம்பரமான ஆபரணங்கள் அணிந்திருந்தாலும், ஒருவர் அமைதியுடனும், தன்னடக்கத்துடனும், புனித வாழ்வில் ஈடுபட்டவராகவும், யாருக்கும் தீங்கு செய்யாதவராகவும் இருந்தால், அவரே உண்மையான துறவி, உண்மையான மதகுரு, உண்மையான பிக்கு.



* * * * * * * *

மற்றவரை விசாரணை செய்யும் நீதிபதி ஆகாதீர்கள். மற்றவரைக் கண்டிக்காதீர்கள். மற்றவர் குறைகளைக் கண்டிப்பவன் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்.
Do not be a judge of others, do not judge others. Whoever judges others digs a pit for themselves. A.III,350

* * * * * * * *

நரிகள் ஊளையிடுவதையும் பறவைகள் பாடுவதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மனிதன் சொல்வதைச் சரியாகக் கணிப்பது மிகக் கடினமான செயலாக உள்ளது. 'அவன் என் உறவினன், என் நண்பன், என் கூட்டாளி' என்று முன்னர் ஒருவர் உங்களை மகிழ்வித்திருந்ததால் அவரைப் பற்றி நீங்கள் இப்படிப் பெருமையாக நினைக்கலாம். ஆனால் இப்போது அவர் உங்கள் எதிரியாகக் கூட இருக்கலாம். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவர்கள் எப்போதும் நம்மை நெருங்கியிருக்கின்றனர். நம்மைப் பிடிக்காதவர்கள் எப்போதும் தொலைவிலேயே உள்ளார்கள். கடல் கடந்து இருந்தாலும் உண்மையான நண்பன் உண்மையான நண்பனாகவே இருக்கின்றான். கடல் கடந்து இருந்தாலும் நேர்மையற்றவன் நேர்மையற்றவனாகவே இருக்கின்றான்.


* * * * * * * *



This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola