தத்துவ கவிதைகள்

: நிரந்தரமில்லா உலகில் நிரந்தரமானது எதுவோ?:

கடல் மீது கொண்ட நீலம்
தனக்கே சொந்தமென
கடல் கொந்தளித்தால்
வானம் தான் கோபம் கொள்ளாதோ?

வான் மீது கொண்ட மேகம்
தனக்கே சொந்தமென
வான் வழக்கிழுத்தால்
கடல் தான் கோபம் கொள்ளாதோ?

உடல் மீது கொண்ட ஆன்மா
தனக்கே சொந்தமென
உடல் கூக்குரலிட்டால்
இயற்கை தான் கோபம் கொள்ளாதோ?

உன் மீது கொண்ட காற்று
தனக்கே சொந்தமென
உன் உள்ளமுரைத்தால்
பஞ்சபூதங்கள் தான் கோபம் கொள்ளாதோ?

எதுவும் சொந்தமில்லா உலகில்
எல்லாம் சொந்தமென மானிடன்
மாயையை மெய்யாக்கி வாழ்வது
மட்டும் ஏனோ?.

பொருள் : கடல் நீரில் தெரியும் நீலம் கடலுக்கு சொந்தமில்லை.வானின் பிம்பம் கடல் மீது விழுவதால் கடல் நீரின் நிறம் நீலமாகிறது.நீருக்கு நிறங்கள் கிடையாது.நீர் அது இருக்கும் இடத்தை பொறுத்து நிறம் அடைகிறது.மேகம் கடல் நீரின் ஆவியாதல் தன்மையில் உருவாகிறது.அது மேகத்துக்கு சொந்தமில்லை.உடலில் இருக்கும் ஆன்மா உடலுக்கு சொந்தமில்லை.மனிதனின் இறப்பிற்கு பின் உடல் அழிந்து விடும்.ஆனால் உள்ளிருக்கும் ஆன்மா அழியாது.அது இன்னொரு உடலில் அடைக்கலம் ஆகி விடும்.ஆன்மா எந்த ஒரு உடலுக்கும் சொந்தமில்லை.நம்மை தொட்டு சென்றிடும்
காற்று நமக்கு சொந்தமில்லை.அது இயற்கைக்கு சொந்தமானது.அது போலவே வாழ்வில் எல்லா உறவுகளும்,செல்வங்களும்,வெற்றிகளும் , தோல்விகளும் எதுவுமே நமக்கு சொந்தமில்லாதது.இதுவே இதன் பொருளாகும்.
..................................................................................................................................................................................

: நீயும் பொம்மை! நானும் பொம்மை! நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை! : ( கவிதையாய் ஒரு பாடல் )

யாருக்கும் யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும் இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ!
பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... )
பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்

ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... )
ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே!
பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே!
நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான் உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )
..................................................................................................................................................................................................................................


மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)
..............................................................................................................................................................................................................................................

படைப்புகள் இருப்பது நிஜமெனில் படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! : ( கவிதையாய் ஒரு பாடல்)

யாரோ ஒருவன் ஆட்டி வைக்கிறான்
ஆட்டம் முடிந்ததும் உணர வைக்கிறான்
ஓர் புள்ளியில் தொடங்கி
ஓர் வட்டமடிக்கிறோம்
வட்டம் முடிவிலே வாழ்க்கை
அறிய வைக்கிறான்.

(யாரோ ஒருவன்....)

முதன் முதல் உலகை பார்த்ததும்
அடடா அவனே அழுகிறான்
அவன் அழுகை குரலை கேட்டதும்
மனிதன் இங்கே சிரிக்கிறான்

இறுதியில்
வாழ்வின் இறுதியில்
அவனே இங்கே சிரிக்கிறான்
அடடா மனிதன் அழுகிறான்

மாற்றமே!மனிதன் வாழ்க்கையே!
இதை புரிந்து நீ
வாழ்வில் உயரு நீ

(யாரோ ஒருவன்....)

உடலின் உள்ளே உயிருமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

விதையின் உள்ளே மரமுமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

இருந்தும் நாம்
கண்ணால் கண்டு கொள்கிறோம்
காட்சி கண்ட பின்
உணர்வை அறிந்து நிற்கிறோம்

உழைத்தால் உயர்வு புரியுமே
உணர்ந்தால் காட்சி தெரியுமே

படைப்புகள் இருப்பது நிஜமெனில்
படைத்தவன் இருப்பதும் நிஜமன்றோ?.
(யாரோ ஒருவன்....)

தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை

எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே

இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்

வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.


  (எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே)

  எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே :

காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்

வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்

ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்

நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்

உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.


This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola